ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை 90 சதவீதம் நிறைவடைந்துவிட்டது- தலைமை வழக்கறிஞர் தகவல்
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை 90 சதவீதம் முடிந்துவிட்டதாக தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் தகவல் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை 90 சதவீதம் முடிந்துவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் தகவல் தெரிவித்திருக்கிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி, அது தொடர்பான விசாரணை நடத்த உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்து, கடந்த 2017ம் ஆண்டு அதிமுக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், ஆணையத்தின் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது என்றும், இது நாள் வரை இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்றும், ஆணையத்தை முடிக்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் தொண்டன் சுப்பிரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு 11-வது முறையாக மேலும் 6 மாதங்களுக்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
விசாரணை ஆணையத்தின் சார்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், 90 சதவீத விசாரணையை ஏற்கனவே முடிந்து விட்டது.
100 க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளோம். அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம், ஆணைய விசாரணைக்கு தடை விதித்திருப்பதால், 2019ம் ஆண்டு ஏப்ரல் முதல் விசாரணை நிறுத்தப்பட்டது என்றார்.
உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் ஆகஸ்ட் 25ம் தேதி விசாரணைக்கு வர இருப்பதால், இவ்வழக்கின் விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.