‘சட்டவிரோதமாக சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டுள்ளார்’ - அவருக்கு ஜாமீன் கொடுங்க...
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வழக்கில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கோரிய ஜாமீன் வழக்கு விசாரணை முடிந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது. சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா.
இவர் அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்ததையடுத்து 3 போக்சோ வழக்குகளில் சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். கடந்த ஜூன் 16ம் தேதி சிறையில் அடைக்கப்பட்ட சிவசங்கர் பாபா, ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த 2 மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் மீண்டும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து பெற்ற வாக்குமூலத்தை போலீசார் தாக்கல் செய்தனர். அதன்பின் சிவசங்கர் பாபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “2015ம் ஆண்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக கூறும் மாணவி 2019ம் ஆண்டு பாபாவை புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.
வெறும் புகாரின் அடிப்படையில் எந்த ஆதாரமும் இல்லாமல் சிவசங்கர் பாபாவை கைது செய்தது சட்டவிரோதம். 10 ஆண்டுகளுக்கு குறைவான தண்டனைக்குரிய சட்டப்பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளார். 60 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டிய குற்றப்பத்திரிகை இன்னும் தாக்கல் செய்யவில்லை’ என வாதாடினார்.
இந்த இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளார்.