சொகுசு காருக்கான நுழைவு வரியை முழுமையாக செலுத்திவிட்டார் நடிகர் விஜய்!
நடிகர் விஜய் தன்னுடைய சொகுசு காருக்கான நுழைவு வரியை முழுமையாக செலுத்திவிட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2012 ம் ஆண்டு நடிகர் விஜய் இங்கிலாந்திலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார். ஆனால், அந்த காருக்கான நுழைவு வரியை கட்ட தவறியதுடன், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அந்தக் காரை பதிவும் செய்யவில்லை. இதனையடுத்து, சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து, நடிகர் விஜய் தன்னுடைய சொகுசு காருக்கு வரி விதிக்க தடை செய்யக் கோரி வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் நடிகர் விஜய்யை நீதிபதி கண்டித்ததுடன், விஜய்யின் மனுவை தள்ளுபடி செய்து, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். நீதிபதியின் கருத்துக்களைத் திரும்ப பெற வேண்டும் என்றும், அபராதம் கட்ட முடியாது என்ற வகையிலும் விஜய் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கில் தனி நீதிபதியின் கருத்துகளை நீக்குவது பற்றி நான்கு வாரங்களுக்குப் பின்னர் விசாரணை நடத்தப்படும். விஜய் செலுத்த வேண்டிய காருக்கான வரியை, வணிக வரித்துறையினர் ஒரு வாரத்தில் கணக்கிட்டுச் சொல்ல வேண்டும். மீதமுள்ள 80 சதவீத வரித்தொகையை அடுத்த ஒரு வாரத்தில் விஜய் செலுத்தியாக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், தற்போது நடிகர் விஐய் காருக்கான நுழைவு வரியாக, ரூ.40 லட்சம் வரை செலுத்தி உள்ளதாக வணிக வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் ரூ. 8 லட்சம் செலுத்தியிருந்த விஜய், தற்போது மீதமுள்ள 32 லட்சம் ரூபாயையும் முழுமையாக செலுத்திவிட்டார்.