‘பப்ஜி விளையாடியதால் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கில் என்ன பாதிப்பு வந்தது’ – ஐகோர்ட்டில் முறையிட்ட பப்ஜி மதன்!

tamilnadu
By Nandhini Aug 07, 2021 09:35 AM GMT
Report

யூடியூப் சேனல்கள் மூலமாக தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியவர்தான் மதன். இவர் மீது பல புகார்கள் எழவே, மதன் குமார் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதனையடுத்து கடந்த ஜூன் 18ம் தேதி மதன் தர்மபுரியில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் ஏராளமான புகார்கள் வந்துக்கொண்டிருந்ததால், அவரை சைபர் குற்றவாளி எனக் கூறி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர், ஜூலை 5ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, மதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தனது செயல்பாடுகளால் மாநிலத்தின் சட்டம் – ஒழுங்குக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

பப்ஜி விளையாடுவது ஒரு போதும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் செயல் எனக் கூற முடியாது. தான் விளையாடியது இந்திய அரசால் தடை செய்யப்படாத கொரிய பப்ஜி விளையாட்டு. தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் தொழில் போட்டியாளர்கள், தனது வீடியோவை எடிட் செய்து பதிவேற்றம் செய்துள்ளனர்.

குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்கள் தனக்கு முறையாக வழங்கப்படவில்லை என்று அதில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு, நீதிபதி பி.என்.பிரகாஷ் தலைமையிலான அமர்வில், வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.