சிவசங்கர் பாபா ஜாமீன் மனு - சிபிசிஐடி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா, அப்பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்ததையடுத்து அவரை கைது செய்த போலீசார் போக்சோ சட்டடத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து, சிவசங்கர் பாபா மீது சிபிசிஐடி போலீசார் எடுத்த நடவடிக்கையால் கடந்த ஜூன் 16ம் தேதி சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதன்பின்னர், சிவசங்கர் பாபா ஜாமீன் கோரி செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
ஆனால், மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் சிவசங்கர் பாபா குறிப்பிட்டுள்ளதாவது -
சுஷில் ஹரி பள்ளிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நான் அறக்கட்டளை மட்டுமே நடத்தி வருகிறேன். ஆன்மீக சொற்பொழிவுக்காக அந்த பள்ளிக்கு சென்று வந்தேன்.
நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, இதயம் தொடர்பான பிரச்னைகள் எனக்கு இருப்பதால் தலைமறைவாக இருக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஆன்மீக பயணத்துக்காக டெல்லி சென்றபோது தான் சிபிசிஐடி போலீசார் என்னை கைது செய்தனர். எனவே ஜாமீன் தரவேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சிவசங்கர் பாபா ஜாமீன் மீது சிபிசிஐடி போலீசார் ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது.
