இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க முடியாது: நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்!
திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் இருப்பவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து முடிவெடுக்குமாறு தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசுத் தரப்பில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. அதில், இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்றும், ஆகையால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க இயலாது என்றும் மத்திய அரசு வாதம் செய்துள்ளது.
அதாவது, திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த பலர், தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என கடந்த 2009-ம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்கள்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கடந்த 2019-ம் ஆண்டு மனுதாரர்கள் அனைவரும் குடியுரிமை கோரி திருச்சி மாவட்ட கலெக்டரிடம் புதிதாக விண்ணப்பிக்கவும், அந்த விண்ணப்பங்களை திருச்சி மாவட்ட கலெக்டர் மத்திய அரசுக்கு தாமதமின்றி அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஆனால், அதிகாரிகள் இந்த உத்தரவை முறையாக பின்பற்றவில்லை எனக்கூறி அந்த அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.
இதனையடுத்து, இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசுத் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுதாக்கல் மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி சிவஞானம் அமர்வு முன்பு வந்தது.
அப்போது, "இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள். எனவே, அவர்களுக்கு குடியுரிமை வழங்க இயலாது என மத்திய அரசு வாதம் செய்தது. அதற்கு தலைமை நீதிபதி அமர்வு, "தனி நீதிபதியின் உத்தரவில் மனுவை பரிசீலிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மனுவை பரிசீலித்து, குடியுரிமை வழங்குங்கள் அல்லது நிராகரியுங்கள். அதற்கு ஏன் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளீர்கள்?" எனக் கேள்வி எழுப்பினார்.
இதனைதொடர்ந்து திருச்சி கொட்டப்பட்டு முகாம் அகதிகள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், "இந்த விவகாரத்தை பொறுத்தவரை தமிழக அரசின் நிலைப்பாடு மாறி இருக்கிறது. எனவே, தமிழக அரசுக்கு இது குறித்து முடிவெடுக்குமாறு உத்தரவிடலாம் என கூறினார்.
அதற்கு நீதிபதிகள், "தமிழக அரசின் முடிவாயினும் அது சட்டங்களுக்கு உட்பட்டே முடிவெடுக்கப்பட வேண்டும் என்றார். அடுத்த மாதம் 23ம் தேதிக்குள் தமிழக அரசு இது குறித்து பதில் அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.
