தமிழகம் திரும்பும் 2 வீராங்கனைகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க உள்ளார் தமிழக முதல்வர் - அமைச்சர் மெய்யநாதன் தகவல்!
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள சுபா வெங்கடேசன் மற்றும் தனலட்சுமி ஆகியோருக்கு தமிழகம் திரும்பியதும் அரசுப் பணிக்கான உத்தரவை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குவார் என்று அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அறிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது- டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தில் இருந்து சென்றுள்ள விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளை உற்சாகப்படுத்தும் வகையில் ‘வென்று வா வீரர்களே’ என்ற பாடல் அடிப்படையில் ‘வென்று வா வீரர்களே’ என்ற ஹேஷ்டேக்கை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார்.
ஒலிம்பிக்கில் போட்டியில் இந்தியாவிலிருந்து 127 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த 11 வீரர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு உற்சாகம் கொடுத்து, துணைநிற்கும் வகையில், உலகில் உள்ள 77 நாடுகளைச் சேர்ந்த தமிழர்களை ஒருங்கிணைக்க இந்த பாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது.
‘வென்றுவா வீரர்களே’ பாடலுக்கு இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். தமிழ்நாடு கூடை பந்தாட்டக்கழகம் இந்தப் பாடலை தயாரித்து அளித்திருக்கிறது. தற்போது டோக்கியோ சென்றுள்ள 11 பேரில் 9 பேர் அரசு, தனியார் துறைகளில் பணியில் உள்ளனர்.
மிக வறுமையான குடும்பப் பின்னணியிலிருந்து வந்துள்ள சுபா வெங்கடேசன், தனலட்சுமி இருவரும் தாயகம் திரும்பியதும் அவர்களுக்கு அரசுப் பணி நியமன ஆணையை முதலமைச்சர் வழங்க உள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.