சிறிய கிராமத்தில் பிறந்து, இன்று உலக பணக்காரர்களில் ஒருவர் - சாதனை படைத்த தமிழன் சிவ் நாடார்!

tamilnadu
By Nandhini Jul 02, 2021 10:57 AM GMT
Report

ஒவ்வொரு ஆண்டுதோறும் ஃபோர்ப்ஸ் இதழ் உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் தவறாமல் இடம்பெறும் ஒரு தமிழ் பெயர் சிவ் நாடார். தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் சிவ் நாடார் 71வது இடத்தில் இருக்கிறார்.

இவரின் நிகர மதிப்பு $23.5 பில்லியனாகும்.

யார் இந்த சிவ் நாடார்? ஒரு தமிழருக்கு இவ்வளவு பணம் வைத்துள்ளாரா?

இவரைப் பற்றி விரிவாக பார்ப்போம்...

சிறிய கிராமத்தில் பிறந்து, இன்று உலக பணக்காரர்களில் ஒருவர் - சாதனை படைத்த தமிழன் சிவ் நாடார்! | Tamilnadu

ஒரு மனிதன் பணம் வைத்திருப்பது முக்கியம் இல்லை. பெருமையும் இல்லை. ஆனால், அந்தப் பணத்தைக் கொண்டு அவர் செய்யும் நல்ல விஷயங்களில்தான் உள்ளது.

தூத்துக்குடியில் மூலைமொழி கிராமத்தில் பிறந்து தமிழ்வழி கல்வி பெற்று மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும், கோவை PSG கல்லூரியிலும் பட்டப்படிப்பை முடித்தவர் தான் சிவ் நாடார்.

இன்று உலகின் டாப் பில்லினியர்களில் ஒருவராக திகழ்கிறார். சிவ் நாடாரின் தந்தையின் பெயர் சுப்பிரமணிய நாடார்.இவர் நீதிபதியாகப் பணியாற்றியவர். சிவந்தி ஆதித்தனாரின் உறவினர் இவர்.

இவர் வசதியான வீட்டில் பிறந்தாலும் கூட, அப்போதைய செல்வந்தர்களின் பிள்ளைகள் படிக்கும் கான்வென்டில் படிக்கவில்லை.

தனது ஊரிலேயே அரசு பள்ளியில் படித்தவர் தான் சிவ் நாடார். அது போல, வணிகத்துக்குப் பேர் போன சமூகத்தில் பிறந்திருந்தாலும் வழக்கமான வணிகத்தைத் தேர்ந்தெடுக்கவில்லை.

இந்தியாவிலேயே, ஏன் உலகத்திலேயே அப்பொழுது வெகு சிலர் மட்டுமே செய்து கொண்டிருந்ததைத் தேர்ந்தெடுத்து அதில் இறங்கி வென்றவர். இந்த விஷயங்கள்தான் சிவ் நாடாரை பலரிடமிருந்து வேறுபடுத்துகின்றன.

சிவ் நாடார் தன் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு, டி.சி.எம். (DCM) நிறுவனத்தில் சுமார் 9 ஆண்டுகள் வேலை பார்த்தார்.

போதுமான அனுபவங்களைப் பெற்ற பிறகு சொந்தமாக தொழிலை தொடங்க ஆர்வம் காட்டினார். இதன் காரணமாக ‘மைக்ரோ காம்ப்’ என்ற பெயரில் டெலிடிஜிட்டல் கால்குலேட்டர்கள் விற்கும் சிறு நிறுவனத்தைத் தொடங்கினார்.

இவருடைய நிறுவனம் ஓரளவு வெற்றி அடைந்தது. அதனையடுதது, 1976ம் ஆண்டு எச்.சி.எல். (HCL) கணினி நிறுவனத்தை நிறுவினார். முதலில் எலக்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டார்.

வெளிநாடுகளிலிருந்து கணினி உதிரி பாகங்கள் இறக்குமதி, சிங்கப்பூரில் கணினி வன்பொருள் விற்பகம், புதிய வடிவமைப்பிலான மடிக்கணினிகள் என கணினி விற்பனையில் பல பரிமாணங்களிலும் இவர் பம்பரமாக சுழன்றார்.

கணினித் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், பொருளாதார சீர்திருத்தங்கள் அனைத்தும் கணினித் துறைக்குச் சாதகமாக அமைந்தன. இந்த மாற்றங்களை எல்லாம் தனது ஏற்றத்திற்கு நன்கு பயன்படுத்திக்கொண்டார் சிவ் நாடார்.

2016ம் ஆண்டுக்கு பின் இவர் ரூ. 650 கோடிக்கும் மேலான ஏழை மாணவ, மாணவர்களின் கல்விக்காக உதவி செய்துள்ளார். அதற்காக, ஒரு கிராமத்தையே இவர் தத்தெடுத்தார். அங்கு பேருந்து நிலையம், நிழற்குடை, சாலை தடுப்புகள், தண்ணீர் தொட்டிகள் என வாங்கி வைத்து அனைத்திலும் தங்கள் நிறுவனத்தின் பெயரைப் பதித்தார்.

‘கல்விதான் ஒரு மனிதனுக்கு உண்மையான வளர்ச்சியாக இருக்கும்’ என்று கூறி தமிழகத்தில் SSN பொறியியல் கல்லூரியையும், உத்திரபிரதேசத்தில் வித்யாஞான் பள்ளியையும் தொடங்கினார். இந்த கல்லூரி லாபநோக்கமில்லாமல் தொடங்கப்பட்ட கல்லூரியாகும்.

இந்த கல்லூரியில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களின் வாழ்க்கையை மாற்றி வைத்தது. SSN கல்லூரி அண்ணா பல்கலைக்கழக தர வரிசையில் எப்பொழுதுமே முதல் 5 இடங்களுக்குள் இடம் பெற்று வருகிறது.

வித்யாஞான் பள்ளி உலகத் தரத்தில் செயல்பட்டு வருகிறது. அரசு பள்ளியில் நன்றாகப் படித்த, படிக்கும் ஏழை மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உயரிய கல்வியைக் கொடுத்து அவர்களின் வாழ்க்கையை மாற்றி வருகின்றார். உலகப் பெரு நிறுவனங்களில் இந்தியர்கள் உயர் பதவிகளில் இருக்கின்றனர்.

ஆனால், கணினி வன்பொருள் தயாரிப்பில் ஈடுபட்ட முதன்மை இந்திய நிறுவனங்களில் ஒன்று சிவ் நாடாரின் HCL நிறுவனம்.

தொடர்ந்து வெற்றியின் ஓட்டத்திலேயே இருந்த பொழுதும் தன்னைச் சுற்றி இருக்கும் சமூகத்தையும் யோசித்து அதற்கான உதவிகளை தவறாமல் செய்து வருகிறார் சிவ் நாடார்.