யூடியூபில் ஆபாசமாக பேச, திட்டுவது போல் நடிக்க ரூ.5 லட்சம் சம்பளம் - மதனின் சொகுசு கார்கள், கேமராக்கள் பறிமுதல்
ஆபாச யூடியூபர் மதனின் சொகுசு கார்கள் மற்றும் ட்ரோன் கேமராக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை யூடியூப்பில் லைவ் ஸ்ட்ரீமிங் மூலம் விளையாடி வந்த மதன் சிறுவர், சிறுமியரை ஆபாசமாக பேசி வருவதாக மதன் மீது புகார் கொடுக்கப்பட்டது.
இதுகுறித்து 150க்கும் மேற்பட்டோர் சைபர் க்ரைம் போலீசில் மதன் மீது புகார் கொடுத்தனர். மதனுடன் சேர்ந்து அவரது மனைவி கிருத்திகா ஆபாசமாக பேசிய வீடியோ வெளியானது கண்டுபிடிக்கப்பட்டது.
மதனின் மனைவி யூடியூப் சேனலின் நிர்வாகியாகவும் இருந்திருக்கிறார். இதனையடுத்து, முதலில் மதனின் மனைவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், தர்மபுரியில் உறவினர் வீட்டில் தலைமறைவாக இருந்த மதனை போலீசார் இன்று கைது செய்தனர். மதன் போலீசாரின் காலில் விழுந்து தான் செய்தது தவறு என்று அழுததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பப்ஜி மதனும் அவரது மனைவி கிருத்திகாவும், யூடியூபில் ஆபாசமாக பேசி ரூ.4 கோடி வரை சம்பாதித்திருக்கிறார்கள். ரூ. 4 கோடியும் பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா வங்கி கணக்கில் இருப்பதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். பப்ஜி மதன் ஆபாசமாக பேசி சம்பாதித்து, அந்தப் பணத்தில் இரண்டு ஆடி கார்கள் வாங்கியுள்ளார்.
இந்த காரை தற்போது போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். யூடியூபில் புகழ்ந்து பேசவும், திட்டுவது போல் நடிக்கவும் ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை சம்பளம் மதன் கொடுத்திருக்கிறார். அவருடன் யூடியூபில் ஆபாசமாக பேசிய தோழிகளையும் போலீசார் கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.