வைரமுத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் நபர் - ஆதாரத்தை வெளியிட்டு எரிச்சரிக்கை விடுத்த சின்மயி!

tamilnadu
By Nandhini May 30, 2021 06:38 AM GMT
Report

வைரமுத்து மீது இதுவரை சட்ட ரீதியாக புகார் எதுவும் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து, புகாரளித்த ஆதாரத்தை சின்மயி தற்போது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

வழக்கம் போலவே வைரமுத்து மீதான #Metoo புகாரை மீண்டும் தூசி தட்டி எழுப்பியுள்ளார் பாடகி சின்மயி. தற்போது பள்ளி பாலியல் விவகாரம் கூட அவ்வளவு பெரிதாக இல்லை. இன்று, சமூக வலைதளங்களில் சின்மயி vs வைரமுத்து என்ற இரு குழுவினருக்கு நிகழும் யுத்தம் தான் பெரிதாக மாறியிருக்கிறது.

கேரளாவின் புகழ்பெற்ற ஓஎன்வி எழுத்தாளர் விருது வைரமுத்துவுக்கு அளிப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை நடிகை பார்வதி உள்ளிட்ட சிலர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவருக்கு எப்படி ஓஎன்வி விருது கொடுக்கலாம் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதனையடுத்து விருதை வழங்கிய ஜூரி குழு மறு பரிசீலனை செய்வதாகக் கூறியது. இத்தகவலை அறிந்த, வைரமுத்து விருதைத் திருப்பியளித்து, பரிசுத்தொகை ரூ.2 லட்சத்தை கேரள நிவாரண நிதிக்கு அனுப்புவதாகக் கூறினார்.

இப்போது வைரமுத்துவின் மூத்த மகன் மதன் கார்க்கியையும் இழுத்துவிட்டதால் ட்விட்டரே தற்போது களைகட்டியிருக்கிறது.

ஒரு நெட்டிசன், “பொண்ணு கிட்ட தப்பா நடந்த ஒருத்தன கல்யாணத்துக்கு கூப்டு கால்ல விழ சொன்னா ஒங்கதாத்தால விட பெரிய மாமா உலகத்துல யாராச்சும் இருக்க முடியுமான்னு சொல்லிட்டு போங்க டோலி” என்று பதிவிட்டார்.

அதற்குப் பதிலடி தந்த சின்மயி, “அந்த ஆள கூப்பிட சொல்லி டார்ச்சர் பண்ணுனதே அவர் மகன் தான். உன்னைய போல பெரிய ஆள் தான் மாமா அவரும். எல்லாம் ஒரே குட்டையில ஊரின மட்டைதான். மொலஸ்ட் பண்ணாருனு சொன்ன பிறகும் அப்பாவ கல்யாணத்துக்கு கூப்பிடுனு சொல்லக் கூடிய ஆள்” என்று ட்வீட் செய்தார்.

இந்த ட்வீட்டை மதன் கார்க்கியிடம் மற்றொரு நெட்டிசன் கோர்த்துவிட்டார். அதற்கு விளக்கம் அளித்த மதன் கார்க்கி, “இது மேலும் ஒரு பொய். அவர் என் தந்தையை தன் திருமணத்திற்கு அழைக்க விரும்பினார். ஆனால் என் தந்தை அவர் மீது அதிருப்தியில் இருந்ததால் அதற்கு சம்மதிக்கவில்லை. என்னைப் பேச சொல்லி அபாயின்ட்மென்ட் வாங்கிக் கொடுக்குமாறு சின்மயி கேட்டார்.நானும் வாங்கி கொடுத்தேன். அவரின் வீட்டிற்கு சின்மயி தனியாகச் சென்று அவரின் பாதங்களைத் தொட்டு ஆசி வாங்கி திருமணத்திற்கு வரவேற்றார்” என்று பதிவிட்டார்.

அதேபோல மற்றொரு ட்வீட்டில், “உங்கள் அப்பா, அம்மாவை வெறுக்கும் விதமாக யாரா ஒருவர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்கள். உங்கள் பெற்றோர் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார்கள் என்றால் நீங்கள் யாரை நம்புவீர்கள்? பெற்றோரைத் தானே நம்புவீர்கள். அப்படித் தான் நான் என் அப்பாவை நம்புகிறேன். சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் பக்கம் உண்மை இருந்தால் அவர்கள் அதை சட்ட ரீதியாக அணுகலாம்’’ என்றார்.

தான் புகாரளிக்கவில்லை என்று கூறுவது பொய்யானது என்றும் அதற்கான சட்ட நடவடிக்கையை தான் எடுத்ததாகவும் சின்மயி பதில் கூறியுள்ளார்.

அதற்கான ஆதாரத்தையும் இணைத்து ட்வீட் செய்துள்ள அவர், “எனக்கு தெரிந்த எல்லாவிதமான சட்ட நடவடிக்கைகளையும் நான் மேற்கொண்டேன். தேசிய மகளிர் ஆணையம் உதவும் என்று கூறினார்கள்.

அங்கு புகார் அளித்தேன். மீடூ புகார்களை விசாரிக்க தனிக்குழு ஒன்றை உருவாக்கினார்கள். ஆனால் அக்குழு இதுவரை என்னை ஒருமுறை கூட சந்திக்கவில்லை. 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி பெண் போலீஸ் ஒருவர் வந்து என்னிடமும் எனது கணவர் மற்றும் தாயாரிடமும் கைப்பட எழுதிய புகார்களைப் பெற்றுக்கொண்டார்.

இந்தத் தகவலை பல முறை சொல்லியிருக்கிறேன். கடந்த ஆண்டுகளில் அந்த கவிஞரால் எத்தனை தர்மசங்கடங்களைச் சந்தித்திருக்கிறேன் என்றும் கூறினேன். சினிமா துறையில் பலரின் கேரியரை பாழாக்கியுள்ளார். அவ்வாறு வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட வேறு பெண்களின் கதைகளை நான் வெளியிடுவேன் என்று கூறியிருந்தேன்.

அப்போதே இயக்குநர் ஒருவரிடம் கூறி என்னிடம் சமாதானம் பேச அழைத்தார். அதற்காக மன்னிப்பு கேட்கவும் தயார் என்று அவர் பேசியிருக்கிறார். அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. நான் மதன் கார்க்கியிடம், உங்களது தந்தை ஒரு பாலியல் துன்புறுத்தல் செய்யும் நபர் என்று கூறினேன்.

அதற்கு அவர் எங்கள் குடும்பத்தாருக்கு ஏற்கெனவே எல்லாம் தெரியும் என்று கூறினார். அவரும் அவரது மனைவியும் என்னுடன் துணை நிற்பதாக உறுதியளித்தனர். இதுதொடர்பாக நாங்கள் பேசிய தொலைப்பேசி ஆதாரமும் என்னிடம் இருக்கிறது. இப்போது அவர் என்னை பொய் சொல்பவள் என்று கூறினால் கூறிவிட்டு போகட்டும். அவரை நம்பியதற்காக நான் வெட்கப்படுகிறேன்.

மதன் கார்க்கியும் அவர் தந்தையிடமிருந்து வேறுபட்டவர் அல்ல. அவரும் எல்லோர் மாதிரி தான் இருக்கிறார். வைரமுத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் நபர். அவர் தனது அரசியல் லாபியால் பெண்களை அச்சுறுத்துகிறார். இது உண்மை. அவரால் பெண்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எத்தனை பேர் வெளியே வந்தாலும் உண்மை மாறாது. நான் பயப்படவில்லை. இனி நீங்கள் எதை வேண்டுமானாலும் நம்பி கொள்ளுங்கள். இனி இதுகுறித்து தெளிவுப்படுத்த மாட்டேன்” என்று கூறியிருக்கிறார்.