குமரியில் மழையால் முழுமையாக சேதமடைந்த கூரை வீடுகளுக்கு ரூ.5000 - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குமரியில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக முழு ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் இந்த சூழ்நிலையில், மழையால் பாதிப்பிற்குள்ளான இம்மாவட்ட மக்களின் துயர் துடைக்கும் வகையில் மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ், பகுதியாக சேதமடைந்த கூரை வீடு ஒன்றுக்கு ரூ.4100/- வீதமும், முழுமையாக சேதமடைந்த கூரை வீடு ஒன்றுக்கு ரூ.5000/- வீதமும் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது -
வடக்கு அந்தமான் கடல் மற்றும் கிழக்கு மத்திய வங்கக் கடலில் 22.05.2021 அன்று, யாஸ் புயல் உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தால் 19.05.2021 அன்று வெளியிடப்பட்டுள்ள சிறப்பு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, யாஸ் புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள, மாவட்ட நிர்வாகத்தை தயார் நிலையில் வைத்திருக்கவும், பாதிப்பிற்குள்ளாகும் என்று கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பொது மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து உணவு, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்குமாறு அனைத்து உயர் அலுவலர்களுக்கும் உத்தரவிட்டபட்டது.
மேலும், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் 21.05.2021 அன்று சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தி, யாஸ் புயலின் காரணமாக மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உயர் அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுரைகள் வழங்கினார்.
இதுமட்டுமன்றி, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்கள் 22.05.2021 அன்று யாஸ் புயலால் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கருதப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக கூட்டம் நடத்தி, யாஸ் புயலின் காரணமாக மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கினார்.
மேலும், ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ள 45 நாட்டுப் படகுகளில் உள்ள மீனவர்களுக்கு தொலைத் தொடர்பு கருவிகள் மூலமாகவும், இந்திய கடலோர காவல் படை மூலமாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு, 45 நாட்டுப் படகுகளில் ஆழ் கடலில் மீன் பிடிக்கச் சென்ற அனைத்து மீனவர்களும் பத்திரமாக கரை திரும்பியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், பெய்த கன மழையின் காரணமாக, பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் வசித்த 767 நபர்கள் 16 நிவாரண முகாம்களில், கொரோனா நோய்த்தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு, தங்க வைக்கப்பட்டு உணவு, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டது. பாதிப்பு ஏற்படும் என்று கருதப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்களை பாதுகாப்பான இடங்களில் முன் கூட்டியே தங்க வைக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக, உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக, சித்தாறு 1, சித்தாறு 2 மற்றும் மாம்பலத்துறையாறு அணைகளிலும், தாமிரபரணி, வல்லியாறு மற்றும் பழையாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததோடு, வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மொத்தம் 238 கூரை வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், மேலும் 35 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும், 373 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது எனவும் முதல் நிலை அறிக்கை வரப்பெற்றுள்ளது.
மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்களையும், மாண்புமிகு தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் அவர்களையும், கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் வருவாய் நிருவாக ஆணையரையும், பாதிப்பிற்குள்ளான பகுதிகளை பார்வையிட்டு, மக்களுக்குத் தேவையான நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை துரிதப்படுத்துவதற்காக அனுப்பி வைத்தேன்.
இதுமட்டுமன்றி, மின்சாரம், சாலை, உள்ளாட்சி மற்றும் இதர துறைகளின் உட்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை உடனடியாக சரி செய்யவும், இவை தொடர்பான அறிக்கையினை விரைவில் சமர்ப்பிக்கவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக முழு ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் இந்த சூழ்நிலையில், பாதிப்பிற்குள்ளான இம்மாவட்ட மக்களின் துயர் துடைக்கும் வகையில் மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ், பகுதியாக சேதமடைந்த கூரை வீடு ஒன்றுக்கு ரூ.4100/- வீதமும், முழுமையாக சேதமடைந்த கூரை வீடு ஒன்றுக்கு ரூ.5000/- வீதமும் வழங்கப்படும்.
மேலும், மானாவரி மற்றும் நீர்ப்பாசனம் பெற்ற நெற்பயிர்களுக்கும், நீர்ப்பாசன வசதி பெற்ற இதர பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரணத் தொகையாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரமும், மானாவரி நெற்பயிர் தவிர, அனைத்து மானாவரி பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரணத் தொகையாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரமும், பல்லாண்டு கால பயிர்களுக்கு இடுபொருள் நிவாரணத் தொகையாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கிடவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையினை தாமதமின்றி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.