ராஜகோபாலனை தொடர்ந்து மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் மீது மாணவிகள் பாலியல் புகார்!
பத்ம சேஷாத்ரி பள்ளியைத் தொடர்ந்து, தற்போது மகரிஷி வித்யா மந்திர் பள்ளியிலும் ஆசிரியர் மீது மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரை அடுத்து, அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ராஜகோபாலன் வருகின்ற 8ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி பாலியல் புகார் விவகாரத்தில் மாணவிகளின் பாலியல் புகார்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், சென்னை அயனாவரத்தில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியிலும் ஆசிரியர் மீது மாணவிகள் பாலியல் புகார் கொடுத்துள்ளனர்.
இந்தப் புகாரை அடுத்து ஆசிரியர் ஆனந்தனை இடைநீக்கம் செய்து, விசாரணை நடத்த கமிட்டி அமைத்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான வணிகவியல் பாட ஆசிரியர் ஆனந்தன்.
இவர் மீது பாலியல் புகார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சமூகவலைதளத்தில் தற்போது வெளியாகி வருகிறது.
இதைத்தொடர்ந்து, இந்த விவகாரத்தில் தலையிட்ட பள்ளி நிர்வாகம் ஆசிரியர் ஆனந்தனை பணியிடை நீக்கம் செய்துள்ளது.
ராஜகோபாலனைத் தொடர்ந்து, மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் சிக்கியுள்ளார்.