சீனா, ஹாங்காங்கிலிருந்து 2 சரக்கு விமானங்களில் 55 ஆக்சிஜன் செறிவூட்டிகள் சென்னைக்கு வந்தன!
ஆந்திரா மாநிலம் சூலூரிலிருந்து 2 IAF ஹெலிகாப்டா்களில் 1070 கிலோ மருத்துவ உபகரணங்களும், சீனா, ஹாங்காங்கிலிருந்து 2 சரக்கு விமானங்களில் 55 ஆக்சிஜன் செறிவூட்டிகளும் சென்னை விமானநிலையம் வந்தன.
தமிழகத்தில் பரவும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் தளா்வுகளற்ற முழு ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதோடு 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் போடுவதில் மாநில அரசு அதிதீவிரம் காட்டுகிறது.
தமிழகம் முழுவதும் அரசு சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசிகள் போடுவது, தனியாா் மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் அரசுடன் இணைந்து தடுப்பூசிகள் போடுவது என்று தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதோடு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு தொழிற்சாலையை தமிழக அரசு குத்தகைக்கு எடுத்து தமிழக அரசே தடுப்பூசிகளை உற்பத்தி செய்வது என்ற திட்டங்களிலும் தமிழக அரசு ஈடுப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜன், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வரவழைக்கிறது. அதைப்போல் வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து பொருட்களை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கு இந்திய விமானப்படை விமானங்கள் பெரும் உதவியாக உள்ளன.
இந்நிலையில், தற்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டா்களும் சென்னைக்கு மருத்துவ உபகரணங்களை கொண்டு வரத்தொடங்கியுள்ளன. ஆந்திரா மாநிலம் சூலூரிலிருந்து நேற்று மாலை இந்திய விமானப்படையின் 2 ஹெலிகாப்டா்கள் சென்னை பழைய விமானநிலையம் வந்தன. அதில் 1,070 கிலோ எடையுடைய முகக்கவசங்கள், கொரோனா வைரஸ் பரிசோதனை கிட்டுகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வந்தன. அவைகளை விமானநிலைய லோடா்கள் ஹெலிகாப்டா்களிலிருந்து இறக்கினா்.
விமானநிலைய அதிகாரிகள் அவைகளை தமிழக அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். அதன் பின்பு வேன்கள் மூலம் சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதற்கிடையே ஹாங்காங்,சீனா நாடுகளிலிருந்து சென்னை பழைய விமானநிலையத்திற்கு நேற்று இரவு வந்த 2 சரக்கு விமானங்களில் 55 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வந்தன. விமான நிலைய சுங்கத்துறையினா் மருத்துவ உபகரணங்களுக்கு முன்னுரிமை அளித்து உடனடியாக சுங்கச்சோதனைகள் நடைமுறைகளை முடித்து டெலிவரி கொடுத்து அனுப்பினா்.