PSBB பள்ளி மீது நாளுக்கு நாள் குவியும் புகார்கள் - அரசு எடுத்து விசாரிக்க கோரிக்கை!
சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியில் படிக்கும் மாணவிகள் ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் புகார்கள் கொடுத்து வருகின்றனர். இவர் மீது நாளுக்கு நாள் பாலியல் புகார்கள் குவிந்து வருகின்றன. இதனையடுத்து, இந்தப் பள்ளியை அரசு கையகப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.
சென்னை கேகே நகரில் இயங்கிவரும் பத்ம சேஷாத்ரி பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஆசிரியர் ராஜகோபாலன் கடந்த 20 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். ஆன்லைன் வகுப்பில் மாணவிகளிடம் அத்துமீறி பேசியதாக இவர் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து, போலீசார் விசாரணை நடத்திய போது, ராஜகோபாலன் உண்மையை ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முகமது முன்பு ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர். ராஜகோபாலனை ஜூன் 8ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்தச் சம்பவத்தை விசாரணை செய்து முழு அறிக்கை அனுப்புமாறு தமிழக டிஜிபி திரிபாதிக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதனையடுத்து, இந்தப் பள்ளி மீது வரி ஏய்ப்பு, நிதி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அதிகரித்து வருவதால் அரசு இப்பள்ளியை கையகப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.