திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

tamilnadu
By Nandhini May 27, 2021 02:04 AM GMT
Report

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பௌர்ணமியை முன்னிட்டு இன்று தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா நடைபெற்றது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பௌர்ணமியை முன்னிட்டு இரவு தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். இரவு 7 மணிக்கு கோயில் எதிரே உள்ள வாகன மண்டபத்தில் இருந்து மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துக்கு மத்தியில் வீதி உலா வந்து அருள்பாலித்தார்.

இதில் ஐயர்கள் மற்றும் அர்ச்சகர்கள் தேவஸ்தான அதிகாரிகள் பங்கேற்றனர். 108 வைணவத் திருத்தலங்களில் கருடசேவை முக்கியமான வாகன சேவையாகும். அதேபோன்று ஏழுமலையான் கோவிலில் கருடசேவை மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி நான்கு மாடவீதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.

இரண்டாம் அலை கொரோனா பரவலின் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூபாய் 300 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தளர்வுடன் ஊரடங்கு அமலில் உள்ளதால் குறைந்த அளவில் பக்தர்கள் மட்டுமே தங்க கருட வாகனத்தில் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா | Tamilnadu