மழை காரணமாக பாபநாசம் காரையார் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் சுமார் 7 அடி உயர்வு
நெல்லை மாவட்டத்தின் முக்கிய மற்றும் பிரதான அணையாக பாபநாசம் காரையார் அணை விளங்குகிறது.
இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் நீர்மட்டமும் கிடுகிடுவென உயரந்து வருகிறது.
உச்சநீர்மட்டம் 143 கொண்ட பாபநாசம் காரையார் அணையில் 119.60 அடி நீர்மட்டம் காணப்படுகிறது. நேற்று இந்த அணையில் 112.75 அடி நீர்மட்டம் காணப்பட்டது. இதேபோல் காரையார் அணைக்கு 670 கன அடி நீர்வரத்து காணப்பட்ட நிலையில் இன்று சுமார் 6 ஆயிரம் கன அடி வரை நீர்வரத்து காணப்பட்டது.
இதனால் ஒரே நாளில் சுமார் 7 அடி நீர்மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், பாபநாசம் பகுதியில் 83 மி.மீ பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. இதேபோல் பாபநாசம் காரையார் அணை அருகேயுள்ள உச்சநீர்மட்டம் 156 அடி கொண்ட சேர்வலாறு அணையில் நீர்மட்டம் சுமார் 10 அடி உயர்ந்துள்ளது.