மதுரை வழக்கறிஞர் சங்கம் தமிழக முதல்வருக்கு கடிதம்!
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டி சென்றுக்கொண்டிருக்கிறது.
கொரோனாவால் உயிரிழக்கும் முன்களப் பணியாளர்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் நிவாரணம் வழங்கி வருகிறது. இந்நிலையில், கொரோனாவால் உயிரிழக்கும் வழக்கறிஞர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது -
கொரோனாவால் உயிரிழந்த கீழமை நீதிமன்ற நீதிபதி குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் வழங்கியுள்ளது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கொரோனாவால் உயிரிழந்தனர். அவர்களது குடும்பங்கள் தத்தளித்து வருகின்றன. கொரோனாவால் அனைத்து வழக்கறிஞர்களும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். எனவே வழக்கறிஞர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.