இந்திய விமானப்படை விமானத்தில் டெல்லியிலிருந்து மருத்துவ உபகரணங்கள் சென்னைக்கு வந்தது!
இந்திய விமானப்படை விமானத்தில் டெல்லியிலிருந்து வெண்டிலேட்டா் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் 888 கிலோ 35 பாா்சல்களில் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தது.
டெல்லியிலிருந்து இந்திய விமானப்படை விமானத்தில் வெண்டிலேட்டா்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அடங்கிய 888 கிலோ எடையுடைய மருத்துவ பொருட்கள் அடங்கிய பாா்சல்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தாக்குதல் அதிகமாக உள்ளது. தமிழகத்திலும் சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்டங்கள் உள்ளிட்ட சில மாவட்டங்களில் நோய் தொற்று பரவல் அதிக அளவில் உள்ளது.
தமிழக அரசு கொரோனா வைரஸ் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதோடு நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஜிசன், வெண்டிலேட்டா் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பொருட்களை வெளிநாடுகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் வரவழைப்பதில் தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.
தமிழக அரசின் இந்த தீவிர நடவடிக்கைகளுக்கு இந்திய விமானப்படை விமானங்களும் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. அதன்படி இந்திய விமானப்படையின் தனி விமானம் டெல்லியில் இருந்து, சென்னை பழைய விமான நிலையம் வந்தது.
அதில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தும் வெண்டிலேட்டா்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பெருமளவு வந்திறங்கின.
35 பாா்சல்களில் மொத்தம் 888 கிலோ மருத்துவ உபகரணங்கள் வந்தன. விமானப்படையினா் கண்காணிப்பில் அந்த பாா்சல்களை ஏா் இந்தியா லோடா்கள் விமானத்திலிருந்து இறக்கி வைத்தனா்.
அதன்பின்பு சென்னை விமானநிலைய அதிகாரிகள் மருத்துவ பாா்சல்களை தமிழக அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். அவா்கள் வாகனங்களில் ஏற்றி சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.