கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனாவின் 2ம் அலை அசுர வேகத்தில் பரவி வருகிறது. புதுச்சேரியில் ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
கொரோனா பிடியில் சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் முதல்வராக பொறுப்பேற்ற ரங்கசாமிக்கு கடந்த 9ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது.
இதனையடுத்து, உடனடியாக அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு வாரம் மருத்துவமனையில் அவர் சிகிச்சைப் பெற்று வந்தார். தற்போது, பூரண குணமடைந்த அவர் மருத்துவமனையிலிருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.
சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு திரும்பிய அவர், கோரிமேடு அப்பா பைத்தியம் சுவாமி கோவிலுக்குச் சென்று, அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு தனது வீட்டிற்குச் சென்றார். மருத்துவர்கள் அவரை ஒரு வாரம் காலத்திற்கு தனிமைப்படுத்திக் கொண்டு, ஓய்வெடுக்கும் படி அறிவுறுத்தியுள்ளனர். இதனால், அவர் தன்னுடைய வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு ஓய்வெடுத்து வருகிறார்.