பொதுமக்களிடம் மனித நேயத்துடன் காவலர்கள் நடந்து கொள்ள வேண்டும் – ஐஜி அன்பு அட்வைஸ்
பொதுமக்களிடம் மனித நேயத்துடன் காவலர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று ஐஜி அன்பு அறிவுரை வழங்கியுள்ளார்.
தென்மண்டல புதிய ஐஜியாக அன்பு ஐபிஎஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதனையடுத்து, அவர் இன்று காலை மதுரையிலுள்ள தென்மண்டல ஐஜி அலுவலகத்தில் பதவி ஏற்றுக் கொண்டார். அவரை மதுரை சரக டிஐஜி சுதாகர், மதுரை எஸ்.பி சுஜித்குமார் ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இது கொரோனா ஊடரங்கு காலம். மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அப்போதுதான் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும். காவல்துறையினர் பொதுமக்களிடம் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
வழக்கம்போன்று சட்டம், ஒழுங்கு, குற்றம் தடுக்க முக்கியத்துவம் அளிக்கப்படும். போலீசார் காவல் நிலையங்களுக்கு வரும் மக்களிடம் கனிவோடு நடந்து கொள்ள வேண்டும்.
ஏற்கெனவே மதுரை, நெல்லையில் பணியாற்றியுள்ளேன். தென்மாவட்டம் எனக்கு புதிது கிடையாது. கொரோனா கட்டுப்பாடுக்குப் பிறகு புதிய திட்டங்களை உருவாக்கி, குற்றத்தடுப்பு போன்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படும் என்றார்.