முதல்வரிடம் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.10 கோடி வழங்கிய கலாநிதி மாறன்!
தமிழக முதல்வரை நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.10 கோடியை கலாநிதி மாறன் வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. கொரோனா பேரிடரின் நோய்த்தொற்று ஒருபுறம், பொருளாதார பாதிப்பு ஒருபுறம் என்று தமிழக அரசு நிர்வாகத்தை வாட்டி வதைத்து வருகிறது.
படுக்கைகள், மருந்துகள், ஆக்சிஜன் ஆகியவற்றின் இருப்பை அதிகரிக்க முழு வேகத்தில் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் நல்வாழ்வுத்துறைக்குக் கூடுதல் பணியாளர்களைப் பணியமர்த்த நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த திடீர் அவசர செலவீனங்களுக்காக தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக மக்களுக்கும், வெளிநாடுவாழ் தமிழர்களுக்கும் தாராளமாக கொரோனா நிவாரண நிதி அளிக்கும்படி கோரிக்கை விடுத்தார்.
முதல்வர் கோரிக்கையை ஏற்று வெளிநாடுவாழ் தமிழர்கள், தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சிகள், கட்சித் தலைவர்கள் தொடங்கி சாதாரண கடைநிலை ஊழியர் வரை நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு நேரில் சென்ற சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன், கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.10 கோடிக்கான காசோலையை வழங்கினார். அவருடன் காவேரி கலாநிதிமாறன் மற்றும் துர்க்கா ஸ்டாலின் உடன் இருந்தனர்.