முதல்வர் நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும் - ஓபிஎஸ் – ஈபிஎஸ் அறிவிப்பு!

tamilnadu
By Nandhini May 16, 2021 08:10 PM GMT
Report

முதல்வர் நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும், கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது -

கொரோனா பெரும் தொற்றினால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தரவும், உரிய நிவாரணங்களை வழங்கவும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு1 கோடி ரூபாய் அளிக்கப்படும். மேலும் கழக நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும், நிவாரண பணிகளுக்கு என முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும்.

இப்பெருந்தொற்றின் முதல் அலை மக்களைத் தாக்கிய நேரத்தில் கடந்த ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு அரசிடம் ஒரு கோடி அளிக்கப்பட்டது . இப்போது அரசிடம் கழகத்தின் சார்பில் வழங்கப்படுகின்ற ஒரு கோடி ரூபாய் மற்றும் கழக நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு மாத ஊதியம் ஆகியவற்றோடு, ஆங்காங்கே கழக உடன்பிறப்புகள் தங்கள் பகுதிகளிலும் அல்லலுறும் மக்களுக்கு கொடை கரம் விரித்து நீட்டி நம் கொள்கை வழிநின்று மக்களின் துன்பம் துடைத்து விட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.