தூத்துக்குடி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்வித் தகுதி அடிப்படையில் அரசு வேலை - கனிமொழி எம்.பி உறுதி!
தமிழகத்தில் கொரோனா 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தமிழகம் முழுவதும் மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து, தமிழகம் முழுவதும் முகாம் அமைத்து தடுப்பு செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், தூத்துக்குடி அருகேயுள்ள மாப்பிள்ளையூரணி பகுதியிலும் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமிற்கு எம்.பி கனிமொழி மற்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கனிமொழி எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-
45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசிப் போட்டுக்கொள்ள வேண்டும். தூத்துக்குடி சம்பவத்தில் ஈடுபட்ட பலரை அதிமுக ஆட்சியில் தவறாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்குமாறு பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தூத்துக்குடி சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக ஆட்சியில் வேலை வழங்கப்பட்டது. ஆனால் கல்வித் தகுதிக்கு ஏற்றாற்போல வேலை வழங்கப்படவில்லை. இது குறித்து புகார்கள் எழுந்துள்ளன. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறோம்.
தூத்துக்குடி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்வித் தகுதி அடிப்படையில் அரசு வேலை கிடைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.