ரெம்டெசிவர் மருந்து வாங்க நேரு ஸ்டேடியத்திற்கு யாரும் வர வேண்டாம் : காவல்துறை அறிவிப்பு!
சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் வழங்கப்பட்டு வந்த ரெம்டெசிவர் மருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலால் நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்காக ரெம்டெசிவர் மருந்து சென்னையில் உள்ள நேரு விளையாட்டரங்கில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இன்று முதல் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்யப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது -
தமிழக முதல்வர் தலைமையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் நேற்று கலந்துகொண்ட கலந்தாய்வு கூட்டத்தில் நோயாளிகளின் உறவினர்கள், மருந்துகள் பெற சிரமப்படுவதை புற்றுநோயாளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவர் மருந்துகள் நாளை முதல் கிடைக்க தமிழக அரசால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் ரெம்டெசிவர் மருந்துகள் தேவைப்படுவோர் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களை அணுக அறிவுறுத்தப்படுகிறது.
இதனால் கடந்த 15ம் தேதி முதல் நேரு ஸ்டேடியத்தில் வழங்கப்பட்டு வந்த ரெம்டெசிவர் மருந்துகள் இன்று முதல் வழங்கப்படமாட்டாது. எனவே பொதுமக்கள் யாரும் நேரு விளையாட்டரங்கிற்கு மருந்துகளை வாங்க வரவேண்டாம் என சென்னை பெருநகர காவல் துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல் செய்தி :#chennaicitypolice #greaterchennaipolice#chennaipolice pic.twitter.com/HbNaxW2o83
— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) May 17, 2021