தமிழகத்தில் ஒரிரு நாளில் 18 வயதுடையோருக்கான தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் - மா.சுப்பிரமணியன் தகவல்

tamilnadu
By Nandhini May 16, 2021 10:19 AM GMT
Report

ஒரிரு நாளில் 18 வயதுடையோருக்கான தடுப்பூசி செலுத்தும் பணி தமிழகத்தில் தொடங்க இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரம் சித்ரா நகரில் உள்ள நியாய விலைக் கடையில் தமிழக அரசின் அரசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி முதல் தவணையாக ரூ. 2000த்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது -

ரெம்டெசிவர் மருந்து தட்டுப்பாட்டைப் போக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் 7000 தொகுப்புகள் போதுமானதாக இல்லை.

அவசரத் தேவை இல்லாதவர்களுக்கும் மருந்து பரிந்துரைத்து தனியார் மருத்துவமனைகள் அரசுக்கு தொல்லை கொடுக்கின்றன. ரெம்டெசிவர் மருந்து மட்டுமே உயிர்காக்கும் மருந்து என்ற நம்பிக்கையால் அதை வாங்க கூட்டம் கூட்டமாக வந்து மக்களும் அரசுக்கு தொல்லை கொடுக்கிறார்கள்.

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், ரெம்டெசிவர் விற்பனையை நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு மாற்றிய நிலையில், அங்கும் மக்கள் கூட்டம் குறையவில்லை.

விரைவில் தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவர் மருந்தின் தேவை குறித்து ஆராய குழு அமைக்கப்படும். அதேபோல், தமிழகத்தில் படுக்கைப் பற்றாக்குறை தொடர்ந்து நீடிக்கும் நிலையில் முடிந்த வரை படுக்கை வசதிகளைப் பெருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தமிழகத்தின் தற்போதைய ஆக்சிஜன் தேவை 470 மெட்ரிக் டன் என்ற நிலையில் உற்பத்தி 400 மெட்ரிக் டன்னாக இருப்பதாகவும் பற்றாக்குறையான 70 மெட்ரிக் டன் பெருவதற்குப் பல்வேறு மாநிலங்களிடம் பேசி பெற்று வருகிறோம்.

ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட பழுது நீக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் உற்பத்தி தொடங்கப்படும்.

ஒரிரு நாளில் 18 வயதுடையோருக்கான தடுப்பூசி செலுத்தும் பணி தமிழகத்தில் தொடங்க உள்ளது.

5 கோடி தடுப்பூசிகளுக்கு ஒப்பந்தம் கோரிய நிலையில் 3 மாத்திற்குள் தடுப்பூசி வந்து சேரும்.

இவ்வாறு அவர் பேசினார்.