ரெம்டெசிவிரால் எந்த பயனும் கிடையாது - தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் திட்டவட்டம்!
தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை அதிகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகி வருகிறது. ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டிச் சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நேரத்தில், ரெம்டெசிவிர் என்ற மருந்து உயிர் காக்கும் மருந்தாக மருத்துவர்கள் கூறுகின்றனர். கொரோனா நோயாளிகளை அனுமதித்ததும் அவர்களின் உறவினர்களிடம் ரெம்டெசிவிர் மருத்து வாங்கி வருமாறு மருத்துவர்கள் நிர்பந்திக்கிறார்கள்.
கொரோனா முதல் அலையின் போதே இந்த மருந்துக்கு பெரும் தட்டுப்பாடு நிலவியது. இந்த மருந்தை நிறைய பேர் வாங்கி ஸ்டாக் வைத்துக் கொண்டனர். ஆனால், இப்போதும் கூட ரெம்டெசிவிர் மருந்தை வாங்க மருத்துவர்கள் பரிந்துரை செய்து வருகிறார்கள்.
இம்மருந்தானது சென்னையில் குறிப்பிட்ட மருத்துவமனைகளிலேயே கிடைக்கிறது. இந்த மருந்துக்கு டிமாண்ட் அதிகமாக உள்ளதால், விடிய விடிய கால் கடுக்க நின்று மக்கள் மருந்தை வாங்கிச் செல்கின்றனர்.
இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி பல ஆயிரக்கணக்கில் ரெம்டெசிவிர் மருந்தை சிலர் கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ரெம்டெசிவர் மருந்தால் எந்த பயனும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ரெம்டெசிவிர் மருந்து கொரோனா சிகிச்சைக்கு பயன்படுமே தவிர, குணப்படுத்த உதவாது என்று தெளிவாக கூறினார்.