பிரதமர் மோடி பதவியேற்ற நாளை கறுப்பு தினமாக அனுசரிக்க விவசாயிகள் முடிவு
பிரதமர் மோடி பதவியேற்ற நாளை (மே 26) கறுப்பு தினமாக அனுசரிக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து 5 மாதங்களுக்கு மேல் டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து 11 கட்டங்களாக விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.
ஆனால், எந்தவிதமான உடன்பாடும் எட்டவில்லை. இந்த அதிருப்தியில் குடியரசு தினத்தன்று மாபெரும் டிராக்டர் பேரணி நடந்தது. ஆனால், அப்பேரணி சிலரால் வன்முறையாக வெடித்தது.
இந்த வன்முறையில் பல அப்பாவி விவசாயிகள் தாக்கப்பட்டனர். இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வார்கள் என்று மத்திய அரசு நினைத்தது. ஆனால் விவசாயிகள் பின் வாங்காமல் டெல்லியின் எல்லைகளில் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், போராட்டம் ஆரம்பித்து ஆறு மாதங்கள் நிறைவடைவதை நினைவுப்படுத்தும் விதமாக வரும் மே 26ம் தேதி கறுப்பு தினமாக அனுசரிக்க விவசாயிகள் சங்கம் முடிவு செய்திருக்கிறது.அன்றைய தினம் தான் பிரதமராக மோடி இந்திய நாட்டின பிரதமராக பதவியேற்றார்.
இது குறித்து, சம்யுக்தா கிஷான் மோர்ச்சா சங்கத் தலைவர் பல்பிர் சிங் கூறுகையில், வரும் மே 26ம் தேதி கறுப்பு தினமாக அனுசரிக்க தற்போது விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.விவசாயிகள் தங்கள் வீடுகள் மற்றும் டிராக்டர்களில் கறுப்புக் கொடி கட்டி எதிர்ப்பை தெரிவிப்பார்கள். கைகளில் கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்வார்கள் என்றார்.