கொரோனா நோயாளிகளை உறவினர்கள் சந்திக்கத் தடை- தமிழக அரசு அதிரடி

tamilnadu
By Nandhini May 16, 2021 05:33 AM GMT
Report

தமிழகத்தில் கொரோனாவின் 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், மருத்துவ கல்வி இயக்குநர், மருத்துவம், ஊரக சுகாதார சேவைகள் இயக்குநர் ஆகியோருக்கு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குநர் டி.எஸ்.செல்வ விநாயகம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது -

தமிழ்நாடு அரசின் பொது சுகாதார சட்டத்தின் 71(1), (2) (டி) ஆகிய விதிகளை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறேன். இச்சட்டத்தின்படி மற்றொருவருக்கு தொற்று ஏற்படுத்துவது தடை செய்யப்படுகிறது.

கொரோனா தொற்றினால் சிகிச்சைக்காக அறிவிக்கப்பட்ட மருத்துவமனைகள், மருத்துவ நிறுவனங்கள், கொரோனா சுகாதார மையங்களில் உள்ள தனிமைப்படுத்தும் வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை சந்திக்க வருவோரையும், கவனிக்க வருவோரையும் அந்தந்த விதிகளில் கூறப்பட்டுள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி தடை செய்ய வேண்டும்.

நோயாளிகளை கவனிப்பதற்காக அட்டெண்டர் அவசியமாகும் பட்சத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். நோயாளிகளில் உடல்நிலை குறித்த தகவல்களை உறவினர்கள் தெரிந்துகொள்ளும் வசதியை செய்து கொடுக்க வேண்டும்.

உங்கள் நிர்வாகத்திற்கு கீழே இருக்கும் மருத்துவ நிறுவனங்களில் இந்த உத்தரவுகள் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.