விருதுநகர் அருகே முறைகேடாக பதுக்கி வைத்திருந்த ரூ. 5 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல்

tamilnadu
By Nandhini May 16, 2021 05:33 AM GMT
Report

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முறைகேடாக பதுக்கி வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோணா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், நோய் தொற்றுகளைக் கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. கடந்த 10ம் தேதி முதல் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டது. இதனால் அரசு மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.

இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடையில் மேற்பார்வையாளராக பணி புரிந்து வருபவர் சிவசுப்பிரமணியன்.

இவர் தன் வேலை பார்க்கும் கடையிலிருந்து மது பாட்டில்களை பதுக்கி வைத்து, மகாராஜபுரத்தில் உள்ள தென்னந்தோப்பில் அதனை முறைகேடாக விற்பனை செய்து வருவதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, மதுவிலக்கு டிஎஸ்பி இமானுவேல் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்குச் சென்று சோதனையிட்டனர்.

அப்போது, அங்கு தென்னந்தோப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4992 குவார்ட்டர் பாட்டில்களும், 264 ஆஃப் பாட்டில்களும் மொத்தம் 5256 பாட்டில்களை போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் முறைகேடாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்த சிவசுப்பிரமணியத்தைத் தேடி வருகின்றனர். 

விருதுநகர் அருகே முறைகேடாக பதுக்கி வைத்திருந்த ரூ. 5 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் | Tamilnadu