5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்க தமிழ்நாடு அரசு முடிவு!
தமிழகத்தில் கொரோனாவின் 2ம் அலை அசுர வேகத்தில் பரவி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா பிடியில் சினிமாத்துறையினரும், அரசியல் தலைவர்களும், மக்களும் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இந்த கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஒரே வழி மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அறிவியலாளர்களும், ஆட்சியாளர்களும் அறிவுறுத்தி வருகிறார்கள்.
அனைத்து மாநிலங்களிலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. 18 வயதிலிருந்து 45 வயது வரை உள்ளவர்களுக்கு மாநில அரசுகளே தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்துகொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு சுமார் 13 லட்சம் தடுப்பூசிகளே மத்திய அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது. இந்த ஒதுக்கீடு 18 வயதிலிருந்து 45 வயது வரை உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்குப் போதிய அளவில் இல்லாததால், உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்து பயன்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
அதற்கான உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகளை (டெண்டர்) கோரியுள்ளது தமிழ்நாடு அரசு. மொத்தமாக 5 கோடி கொரோனா தடுப்பூசிகள் வேண்டும் என்றும், அந்த ஊசிகள் 90 நாட்களில் கிடைக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் கோரி இருக்கிறது.