காற்றுடன் வெளுத்து வாங்கும் தொடர் மழை - கொடைக்கானலில் 3 வீடுகள் சேதம்
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் காற்றுடன் கூடிய தொடர் மழையால் கிளாவரை கிராமத்தில் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளன.
திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளதால், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் நேற்று இரவு முதல் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது.
நேற்று இரவு பெய்த காற்றுடன் கூடிய கன மழையால் கிளாவரை மலைக்கிராமத்தில் உள்ள ஜெயபிரகாஷ், சிவாஜி, பாலமுருகன் ஆகிய மூன்று பேரின் வீட்டின் மேற்கூரையும், பக்கவாட்டு சுவரும் சேதமடைந்துள்ளது.
வீடுகளின் மேற்கூரை பிரிந்து அருகில் இருந்த இரு சக்கர வாகனத்தில் விழுந்ததால், வாகனம் முற்றிலும் சேதமடைந்தது. இதுவரை சம்பந்தபட்ட அதிகாரிகள் யாரும் பாதிக்கப்பட்ட இடத்திற்கு வரவில்லை என சேதமடைந்த வீட்டின் உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு முதல் மேல் மலை கிராமங்களில் மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர்.
இதனையடுத்து, கொடைக்கானலில் சேரன் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் ராட்சத மரம் வேரோடு சாய்ந்து வீட்டின் மீது விழுந்துள்ளது. இதனை அப்புறப்படுத்தும் பணியில் வருவாய் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதான மலைச்சாலைகளில் ஆங்காங்கே மரம் முறிந்து விழுந்துள்ளது. இதனை அப்புறப்படுத்தும் பணியில் காவல் துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.