ஊரடங்கு நேரக் குறைப்பு என்பது கூட்டத்தை அதிகரிக்கும் - இராமநாதபுரம் மக்கள் கருத்து
கொரோனா ஊரடங்கு நேரக் குறைப்பு என்பது மக்கள் கூட்டத்தை அதிகரிக்கும் செயலாகவே கருதப்படுகிறது என்று இராமநாதபுரம் மாவட்ட சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
கொரானா 2ம் அலையின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த இன்று முதல் முழுமையான ஊரடங்கு பிறப்பித்தது தமிழக அரசு. அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்குவதற்காக நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இதன்படி காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் காய்கறி மற்றும் மளிகை கடைகள் திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டது. கடுமையாக்கப்பட்ட ஊரடங்கால் இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது உணவுத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூடி வருவதால் கொரோனா தொற்று பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.
ஒரு வாரத்துக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாத நிலையில் உள்ள தினக்கூலி தொழிலாளர்கள் அவ்வப்போது தங்களது கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஆகவே, அவர்களுக்கு தேவையான காய்கறி மற்றும் உணவு பொருட்களை அன்றாடம் வாங்கும் நிலையில் உள்ளனர். நேரக் குறைப்பு என்பது கூட்டத்தை அதிகரிக்கும் செயலாகவே கருதப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சாயல்குடி காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான காவலர்கள் அதிகாலை ஐந்து மணி முதல் ஒலிபெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கருத்துக்களை கூறி வருகின்றனர். ஆனால் பொதுமக்கள் அதை காதில் வாங்காமல் சாலைகளில் சுற்றித் திரிந்து வருகிறார்கள்.
கொரோனா பாதிப்பு என்பது முக கவசம் அணிவது தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற நடைமுறைகளால் தான் குறைக்க முடியும் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
நேரக் குறைப்பு காரணமாக பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதை மறந்து முண்டியடித்துக் கொண்டு பொருட்களை வாங்குவதில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.
ஆகவே நேர குறைப்பைத் தளர்த்த வேண்டும் அல்லது அத்தியாவசிய பொருள்கள் பொது மக்களை சென்றடைய வழிவகை செய்து தரப்பட வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.