வருகிறது டவ்தே புயல்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத் தீவு பகுதிகளில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு தீவிரம் அடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டிருக்கிறது.
இந்நிலையில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை புயலாக உருவாகியுள்ளது.
இந்தப் புயலுக்கு தக்தே என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இதை டவ் தே என உச்சரிக்கலாம். இது மியான்மர் நாடு வைத்த பெயர் ஆகும். தக்தே என்பது மியான்மரில் உள்ள ஒரு பல்லி இனம் என்று கூறப்படுகிறது.
தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகியுள்ளதால், டவ்தே புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து 18-ம் தேதி குஜராத்தில் கரையை கடக்க உள்ளது.
இந்த புயல் காரணமாக தமிழகத்தில் 18- ந் தேதி வரை மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.