250 கால் டாக்ஸிகள் ஆம்புலன்ஸாக மாற்றம் - சென்னை மாநகராட்சி அதிரடி!
தமிழகத்தில் கொரோனா 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஆம்புலன்ஸுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. நோயாளிகளுக்கு 108 ஆம்புலன்ஸ் கிடைப்பதில் மிகவும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தனியார் நிறுவனம் ஆம்புலன்ஸ்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து, தனியார் ஆம்புலன்ஸ் வசூலிக்க வேண்டிய கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயித்து நேற்று ஆணை பிறப்பித்தது. ஆம்புலன்ஸ் கிடைக்காமல் பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இந்த உயிரிழப்பு ஏற்படாத வண்ணம், சென்னையில் 250 கால் டாக்ஸிகள் ஆம்புலன்ஸாக தற்போது மாற்றப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியால் தொடங்கப்பட்ட இந்தச் சேவையை, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்.
தற்போது, 50 ஆம்புலன்ஸ்கள் மட்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த ஆம்புலன்ஸ்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமையில் இருப்பவர்களை சிகிச்சை மையங்களுக்கு அழைத்து செல்ல பயன்படும்.
இது குறித்து, சென்னை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சுவாமிநாதன் பேசுகையில், கால் டாக்ஸி ஆம்புலன்ஸ்கள் நோயாளிகளை அழைத்துச் செல்ல பயன்படுவதோடு மட்டுமல்லாமல் ஊரடங்கால் வேலையின்றித் தவித்த கால்டாக்ஸி உரிமையாளர்களுக்கும் பயன்படும் வகையில் அமைந்துள்ளது என்றார்.