திருப்பூரில் ஆக்சிஜன் பேருந்து - இன்று முதல் நோயாளிகளின் பயன்பாட்டிற்கு வந்தது!
திருப்பூரில் தொண்டு நிறுவனங்களின் சார்பில் வடிவமைக்கப்பட்ட ஆக்சிஜன் பேருந்து, இன்று முதல் நோயாளிகளின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள ஆக்சிஜன் படுக்கைகள் முழுமையாக நிரம்பி விட்டன.
இதனால், சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள், ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறார்கள். இதனையடுத்து, கொரோனா நோயாளிகளுக்கு உதவி செய்யும் நோக்கோடு, திருப்பூரை சேர்ந்த யங் இந்தியன்ஸ், சக்தி மருத்துவமனை, எஸ்.என்.எஸ். பள்ளி, திருப்பூர் ரைடர்ஸ் கிளப் ஆகிய அமைப்பினர் இணைந்து ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பேருந்தை வடிவமைத்து வந்தன.
அதன் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்று திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் பொதுமக்களின் சேவைக்காக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆக்சிஜன் பேருந்தில், 5 ஆக்சிஜன் சிலிண்டர்கள் பொருத்தப்பட்டிருப்பதால் படுக்கைகள் கிடைக்காத நோயாளிகள் பேருந்திலிருந்திலேயே சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், காற்றோட்ட வசதிக்காக இருக்கைக்கு நேரே மின் விசிறிகளும் பொருத்தப்பட்டுள்ளன. ஆக்சிஜன் பேருந்து சேவையை இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். இந்த பேருந்தை வடிவமைத்த தொண்டு அமைப்பினருக்கு அவர் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
A first of its kind o2 Bus has started functioning in #Tiruppur ! It will patients who are waiting for beds to get immediate o2 support. Thanks to Young Indians, Tiruppur Corona Fighters and all the sponsors ??#o2Bus pic.twitter.com/Me98Ays4ex
— Vijayakarthikeyan K (@Vijaykarthikeyn) May 14, 2021