கோவை தெற்கு தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு?
கோவை தெற்கு தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 6ம் தேதி தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து கடந்த மே 2ம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கையின் போது, கடும் இழுபறிக்குப் பின்னர் கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார்.
கோவை தெற்கு பகுதியில், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமல்ஹாசன், காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற போது பிற்பகல் வரையிலும் கமல்ஹாசன்தான் முன்னிலையில் இருந்தார். ஆனால், பிற்பகலுக்குப் பிறகு நிலவரம் மாறியது. கமல்ஹாசனை பின்னுக்கு தள்ளி வானதி சீனிவாசன் முன்னிலைக்கு வந்தார். கோவை தெற்கு தொகுதியில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற பதற்றம் இரவு 9 மணி வரைக்கும் நீடித்தது. இறுதியில், வானதி சீனிவாசன் 1,500 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி அடைந்தார்.
கமல்ஹாசன் தேர்தலில் தோற்று போனது கட்சியினரிடையே பெரும் அதிருப்தி அடையச் செய்தது.
இதனையடுத்து, கடந்த 11ம் தேதி கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக வானதி சீனிவாசன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், கோவை தெற்கு தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.