மதுரை ஆட்டோ டிரைவரின் செயல் - நெகிழ்ந்து போன முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் கொரோனா 2ம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா பிடியிலிருந்து மக்களை காப்பாற்ற தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், மக்களைக் காக்கும் பணியில் பல தன்னார்வலர்கள் களமிறங்கியிருக்கிறார்கள். அந்த வகையில், மதுரையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் குருராஜ், தனது ஆட்டோவை அவசர காலத் தேவைக்கு மக்கள் இலவசமாக பயணிக்கும் வகையில் மாற்றியிருக்கிறார்.
மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று, அடையாள அட்டையுடன் பயணிக்கும் இவர், பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரயில் நிலையங்களில் காத்திருக்கும் நோயாளிகளை இலவசமாக அழைத்துச் செல்வதற்கும், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கும் ஆட்டோவை இலவசமாக வழங்குகிறார். சில நேரங்களில் நோயாளிகளை தானே கொண்டு மருத்துவமனையில் சேர்க்கும் பணியையும் செய்து வருகிறார்.
இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் தன்னலம் பாராது உதவும் குருராஜின் மனிதநேயத்தை பலர் பாராட்டி வருகின்றனர். கடந்த வருடம் கொரோனா முதல் அலை அதிதீவிரமாக பரவியபோது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குவது, காய்கறி விநியோகம் செய்வது போன்ற பணிகளில் இவர் ஈடுபட்டு வந்ததை பார்த்து பலர் நெகிழ்ந்து போனார்கள்.
இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநர் குருராஜின் சேவையை தமிழக முதல்வர் அறிந்து மகிழ்ச்சி அடைந்தார். இவரைப் பாராட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது -
அன்புள்ள குருராஜுக்கு வணக்கம். உங்களின் சேவை பாராட்டுக்குரியது. நோயாளிகளை இலவசமாக அழைத்துச் சென்று உயிர்காக்கும் உங்களது உன்னதமான சேவையை அறிந்து மகிழ்கிறேன். உங்களால் ஈர்க்கப்பட்டு இதே பணியை தொடரும் தங்களது நண்பர் அன்புநாதனும் பாராட்டுக்குரியவர். அரசுக்குத் துணை நிற்கும் வகையில் தாங்கள் மேற்கொண்டுள்ள சேவையை அரசின் சார்பில் பாராட்டுகிறேன். தாங்களும் தங்களது குடும்பத்தினரும் பாதுகாப்பு நடைமுறைகள் கடைப்பிடித்து நலமுடன் வாழ எனது வாழ்த்துக்கள்
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.