ஊரடங்கு காலத்தில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது
பழனி அருகே ஆயக்குடியில் சட்டவிரோதமாக மது விற்றவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 1000 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
இதனால் டாஸ்மார்க் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி சிலர் மதுக் கடைகளில் மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பழனி டிஎஸ்பி சிவாவிற்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில், தனிப்படை போலீசார் பழனி அருகே ஆயக்குடி பகுதியில் முக்கிய சாலைகளில் சோதனை செய்தனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்தது தெரியவந்தது.
உடனடியாக தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர். விற்பனைக்காக வைத்திருந்த 1000 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.