ஒரு வருடமாக சேமித்து வைத்த உண்டியல் பணத்தை பொது நிவாரண நிதிக்கு கொடுத்த சிறுமிகள்!
தமிழகத்தில் கொரோனா 2ம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த கொரோனா பரவலிலிருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மருத்துவ நெருக்கடி மற்றும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குமாறு மக்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
அதனையடுத்து, தனியார் நிறுவனங்களும், சினிமா பிரபலங்களும், பொதுமக்களும் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல், சமூக அக்கறை கொண்ட சிறுவர், சிறுமியர் பலர் தாங்கள் சேமித்து வைத்த பணத்தை பொது நிவாரண நிதிக்கு வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த குமார் மற்றும் சுதா தம்பதியின் மகள் ஹர்ஷிதா (7), சந்தியா (5) ஆகியோர் தாங்கள் ஒரு வருடமாக சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை பொது நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர்.
தாங்கள் உண்டியலில் சேமித்து வைத்திருந்த 1,095 ரூபாயை திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து வழங்கி இருக்கிறார்கள். சிறுமிகளின் இந்த செயல் மாவட்ட கண்காணிப்பாளரை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.