தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகள் திருப்தி அளிக்கின்றன – உயர்நீதிமன்றம் பாராட்டு
தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை நடைமுறை, ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் இருப்பு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக வழக்கை எடுத்து விசாரணை நடத்தி வருகிறது.
இது தொடர்பான வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கறிஞர் நவீன் மூர்த்தி என்பவர் ஆஜராகி, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 9 பேர் மரணம் அடைந்துள்ளது குறித்து முறையிட்டார். 30 முதல் 45 வயதினர் அதிகம் மரணம் அடைந்துள்ளதாக அச்சம் தெரிவித்தார்.
தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, ராஜிவ்காந்தி மருத்துவமனையில் யாருக்கும் அனுமதி மறுக்கவில்லை என்றும், பிற மருத்துவமனைகளிலிருந்து அனுமதிக்காக வந்து காத்திருந்த நிலையில் சிலர் மரணம் அடைந்துள்ளதாக தெரிவித்தார்.
இதன் பிறகு, தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவில், ஆம்புலன்ஸ் உள்ளே வைத்து சிகிச்சை அளிப்பது மருத்துவமனைக்கு ஈடாகாது.
அதற்குப் பதிலாக மருத்துவர் கண்காணிப்பில் இருப்பது போல ஸ்ட்ரெக்சரில் சிகிச்சை அளிக்க ஏற்பாட்டை அரசு செய்ய வேண்டும். தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை அடிப்படையில் உயர்வாக இருக்கிறது. இருந்தாலும், சதவீதத்தில் குறைந்திருப்பது சற்றே ஆறுதல் அளிக்கிறது.
தடுப்பூசி கொள்முதலுக்கு தமிழக அரசு டெண்டர் விடுத்தாலும், மத்திய அரசின் ஒதுக்கீட்டை வேறு மாநிலங்களுக்கு அனுப்பக்கூடாது. டெண்டர் முடிவுக்கு வந்து சப்ளை துவங்கிய பிறகே ஒதுக்கீட்டை மத்திய அரசு மறு ஆய்வு செய்யலாம். இந்த இக்கட்டான சூழலில் தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறது என்று கூறினர்.