ரெட் அலர்ட் அறிவியுங்கள் - அவசரமாக ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்த எம்பி!
தமிழ்நாட்டில் தற்போது கொரோனா 2ம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டி வருகிறது. இதனால், மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் நிலைமை மிக மிக மோசமாகி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.இருந்தாலும், கொரோனா பரவல் குறையவில்லை.
கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க இடமில்லாமல் மருத்துவர்கள் திணறி வருகின்றனர்.
இதுதொடர்பாக தருமபுரி எம்.பி. செந்தில்குமார் தனது பேஸ்புக் பக்கத்தில் அலார்ட் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “தருமபுரி மாவட்டம் கொரோனா ரெட் அலர்ட் மாவட்டமாக அறிவிக்கப்பட வேண்டும். பொது ஊரடங்கு கடுமையாக அமல்படுத்த வேண்டும். இறப்பு விகிதம் கட்டுப்பாட்டை மீறி செல்கிறது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்களுடன் தொடா்ந்து ஆலோசனை செய்து வருகிறோம்.
ஆக்ஸிஜன் வசதி 450 படுக்கைகள் உள்ளன. ஆயிரம் படுக்கைகள் நிரம்பிவிட்டன. தருமபுரி மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க பத்தாயிரம் படுக்கை வசதி ஏற்படுத்தி மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும்” என்று பதிவிட்டு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.