மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகுகிறேன் - பத்மபிரியா அறிவிப்பு
மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகுவதாக மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மப்ரியா அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அன்பு நிறைந்த மதுரவாயல் தொகுதி மக்களுக்கு என் மீது நம்பிக்கை கொண்டு எனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
என்னைப் போல் எவ்வித அரசியல் பின்புலம் இல்லாத ஒரு நடுத்தர குடும்பப் பெண்ணை உங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி ஏற்றுக்கொண்டு வாக்களித்தமைக்கும் நம்பிக்கை கொடுத்து ஊக்கம் கொடுத்தமைக்கும் நான் என்றும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளேன்.
சில காரணங்களுக்காக நான் சார்ந்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். அதை எனது தொகுதி மக்களான உங்களுடன் பகிர்வது எனது கடமை என்று கருதி தெரிவித்துக்கொள்கின்றேன். எனது களப்பணி எப்போதும் போல இன்னும் சிறப்பாக தொடரும்” என்று பதிவிட்டுள்ளார்.
நடைபெற்று முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் படுதோல்வியைச் சந்தித்தது. இதனையடுத்து, ஒவ்வொருவராக அக்கட்சியிலிருந்து விலகி வருகிறார்கள்.
முதலில் அக்கட்சியின் துணை தலைவர் மகேந்திரன் ராஜினாமா செய்தார். அதனையடுத்து, பல நிர்வாகிகள் விலகினார்கள்.
இந்நிலையில், இன்று காலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் சந்தோஷ்பாபு ஐ.ஏ.எஸ். கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னைப் போல் எவ்வித அரசியல் பின்புலம் இல்லாத ஒரு நடுத்தர குடும்பப் பெண்ணை உங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி ஏற்றுக்கொண்டு வாக்களித்தமைக்கும் நம்பிக்கை கொடுத்து ஊக்கம் கொடுத்தமைக்கும் நான் என்றும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளேன்.
— Padma Priya (@Tamizhachi_Offl) May 13, 2021