முதல்வரின் கோரிக்கையை நிறைவேற்ற, ரூ.10 ஆயிரம் கொடுத்த 3-ம் வகுப்பு மாணவன்!
முதல்வரின் கொரோனா நிதிக்கு, தான் சேமித்து வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை 3ம் வகுப்பு படிக்கும் மாணவன் கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரின் மனைவி கீதா. இவர்களுக்கு சுஹாஷன் என்ற மகன் உள்ளார். சுஹாஷன் ராம கோவிந்தன்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் டேப் வாங்குவதற்காகத் தந்தையிடம் பணம் வாங்கி, சஞ்சாய்கா திட்டத்தில் சிறுக சிறுக சேர்த்து வந்திருக்கிறார்.
இந்நிலையில், கொரோனா நிவாரண நிதி வழங்க அனைவரும் முன்வரவேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். உடனே,தனது பள்ளி ஆசிரியர் அறிவுரைப்படி தான் சேர்த்து வைத்திருந்த ரூ. 10 ஆயிரத்து 135 பணத்தை கொரோனா நிதியாக சிறுவன் வழங்கியிருக்கிறார்.
பெற்றோருடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சிறுவன் சுஹாசன் 3 ஆண்டுகளாக சிறுகச் சிறுக சேமித்து வைத்த 10 ஆயிரத்து 135 ரூபாய்க்கான காசோலையை நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயரிடம் வழங்கியுள்ளார்.

முதல்வர் கொரோனா நிதிக்கு, கிராமப்புறத்தைச் சேர்ந்த சுஹாஷன் தன்னுடைய ஆன்லைன் வகுப்பிற்காக ஆசை ஆசையாக tab வாங்க சேர்த்து வைத்த பணத்தை, உயிர் காக்க உதவிக்கரம் நீட்டிய சிறுவனின் செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.