ஊரடங்கில் கடனைக் கேட்டு தொந்தரவு செய்யும் தனியார் நிதி நிறுவனங்களைக் கட்டுப்படுத்த மீனவ பெண்கள் கோரிக்கை
ஊரடங்கு காலத்தில் வேலையின்றி தவிக்கும் மீனவ பெண்களிடம் கடனைக் கேட்டு தொந்தரவு செய்யும் தனியார் நிதி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் ஊரடங்கு காலத்தில் வேலையின்றி தவிக்கும் மீனவ பெண்களிடம் கடனை தவணையைக் கேட்டு கெடு பிடி செய்யும் தனியார் நிதி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீனவ பெண்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கும் வகையில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு சிறு தொழில் செய்ய வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்பட்டது.
பயனுள்ள இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி, தங்களை வளர்த்துக் கொள்ளத் திட்டமிட்ட சில தனியார் நிதி நிறுவனங்கள் மீனவ பெண்கள் வீடு தேடி வந்து கவர்ச்சித் திட்டங்களைக் கூறி கடன் அளித்துள்ளது.
இதில், ராமேஸ்வரம் மார்க்கெட் தெருவைச் சேர்ந்த 20 பெண்களுக்கு மகாசேமம் நிதி நிறுவனம் மற்றும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் தலா 30 ஆயிரம் கடனளித்துள்ளது.
இந்தக் கடனை வாரம் ரூ.650 செலுத்தும் வகையில் திட்டமிடப்பட்டு தொடர்ந்து தவணை செலுத்தப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கு மற்றும் மீன் பிடி தடைக் காலத்தில் வேலையிழந்து மக்கள் தவிக்கும் நிலையில், வட்டிக்கு வட்டிப் போட்டு கடன் தவணைகளை உடனடியாக திருப்பிச் செலுத்தக் கூறி இந்தத் தனியார் நிதி நிறுவனங்கள் கெடுபிடி செய்து வருகிறது.
இதனால், மன உளைச்சலுக்கு ஆளான மீனவப் பெண்கள், இது குறித்து, தமிழ்நாடு மீனவர் சங்க மாநிலச் செயலாளர் என்.ஜே.போஸிடம் புகார் தெரிவித்தனர். தமிழக முதல்வர் இதில் தலையிட்டு இந்த நிதி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தி வட்டிக்கு வட்டிப் போடப்பட்டுள்ளதை நீக்கி கடனைத் திருப்பிச் செலுத்த 6 மாதங்கள் அவகாசம் பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.