இசைக் குழு நடத்தி பல பெண்களை ஏமாற்றி வந்த பாடகர் - மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனைவி புகார்
நாகர்கோவில் புத்தேரி பகுதியைச் சேர்ந்த மேடை பாடகியான கோபிகா தனது கணவர் மீது புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.
நாகர்கோவிலைச் சேர்ந்தவர் ஸ்டீபன். இவர் இசைக்குழு நடத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது இசைக்குழுவில் பாடுவதற்காக மேடை பாடகியான கோபிகாவை ஸ்டீபன் அழைத்துள்ளார்.
நிகழ்ச்சியை முடித்த பிறகு வலுக்கட்டாயமாக கோபிகாவுக்கு தாலி கட்டியுள்ளார் ஸ்டீபன். இதனால், விருப்பம் இல்லாமல் ஸ்டீபனுடன் மனைவியாக வாழ்ந்து வருகிறார் கோபிகா.
திருமணம் ஆன சில நாளிலேயே ஸ்டீபனின் யார் என்று கோபிகாவுக்கு தெரிந்தது. இசை நிகழ்ச்சிகளுக்கு பாட அழைத்துச் சென்று உணவு கொடுக்காமல் கோபிகாவை கொடுமைப்படுத்தியுள்ளார் ஸ்டீபன். கோபிகாவிற்கு ஸ்டீபனின் சகோதரி மூலம் ஏற்கனவே ஒரு கேரள பெண்ணுடன் திருமணம் ஆனது தெரியவந்துள்ளது.
அந்த பெண்ணையும் ஸ்டீபன் அடித்து துன்புறுத்தி கொடுமைபடுத்தியதால், ஸ்டீபனை விட்டு அந்த கேரள பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பல பெண்களுடன் வயது வித்தியாசம் இல்லாமல் பழக்கம் வைத்துக்கொண்ட ஸ்டீபன் அவர்களை ஸ்டூடியோவிலும், பெரிய மேடைகளிலும் பாட வைக்கிறேன் என்று ஆசை வார்த்தி கூறி திருமணம் செய்துகொள்வதாகவும் வாக்குறுதி அளித்து ஏமாற்றி வந்துள்ளார்.
அறையில் தனியாக இருந்த போது எடுத்துக்கொண்ட ஆபாச படங்களை காட்டி பாதிக்கப்பட்ட பல பெண்களிடமிருந்தே நகைகளையும், பணத்தையும் பறித்து வந்திருக்கிறார் ஸ்டீபன்.
இதற்கிடையில், கோபிகாவை தன்னுடன் நீ வரவில்லை என்றால் உன்னையும், உனது குடும்பத்தினரையும் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டல் விடுத்திருக்கிறார் ஸ்டீபன். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு, தனது பெண் குழந்தையுடன் சென்ற கோபிகா, தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்கக் கோரி மனு கொடுத்துள்ளார்.
ஸ்டீபனிடம் மாட்டிக்கொண்ட அப்பாவி பெண்களை மீட்க வேண்டும் எனவும், ஸ்டீபனுக்கு உரிய தண்டனை கொடுக்குமாறும் புகார் மனுவில் தெரிவித்திருக்கிறார் கோபிகா. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.