ஞாயிறு அன்றும் ரூ.2000 பெறுவதற்கான டோக்கன் தரப்படும் - தமிழக அரசு அறிவிப்பு!
கடந்த ஏப்ரல் 6ம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதற்கான வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2ம் தேதி நடந்தது. அப்போது, திமுக 159 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து கடந்த 7ம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தான் முதல்வராக பதவியேற்றால் கொரோனா நிதியாக ரூ.4000 வழங்குவேன் என சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, தமிழக முதல்வரான அன்றே போட்ட முதல் கையெழுத்து கொரோனா நிவாரண நிதிக்கு தான். அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.2,000 இரண்டு தவணையாக வழங்கப்படும் என அறிவித்தார். அதில் முதல் தவணையை இம்மாதமே கொடுக்க அவர் உத்தரவிட்டார்.
அதன் படி, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வீடு வீடாக சென்று ரேஷன் கடை ஊழியர்கள் ரூ.2000க்கான டோக்கன் விநியோகம் செய்து வருகிறார்கள். இம்மாதத்திற்குள் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பணத்தை விநியோகம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதால் ஞாயிற்றுக் கிழமைகளிலும் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என அறிவித்துள்ளது.
இதற்காக வரும் 16ம் தேதி ரேஷன் கடை ஊழியர்களுக்கு பணி நாளாக அறிவித்துள்ள தமிழக அரசு, அதற்கான விடுமுறை தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது.