ஆந்திராவில் உள்ள கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக ஹைதராபாத் செல்ல தெலுங்கானா போலீசார் கட்டுப்பாடு

tamilnadu
By Nandhini May 11, 2021 11:48 AM GMT
Report

ஆந்திராவிலிருந்து சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ்களில் கொரோனா நோயாளிகள் ஹைதராபாத் செல்ல தெலுங்கானா போலீசார் கட்டுப்பாடு விதிப்பதால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஹைதராபாத் மருத்துவமனைகளில் படுக்கை முன்பதிவு செய்ததற்கான ஆதாரங்களைக் காண்பித்தால் மட்டுமே எல்லைத் தாண்டி தெலுங்கானாவுக்கு கொரோனா நோயாளிகள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் ஒன்றுபட்ட மாநிலம் ஆக இருந்தபோது ஐதராபாத் நகரம் மட்டுமே பெருவளர்ச்சி கண்டது. ஆட்சியில் இருந்தவர்கள் ஹைதராபாத்தில் மட்டுமே ஐ.டி நிறுவனங்கள், பெரும் மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் ஆகியவை ஏற்பட வழிவகுத்து கொடுத்தனர்.

இதனால் தெலுங்கானா, ஆந்திரா மாநில பிரிவினைக்கு பின் தற்போதைய ஆந்திர மாநிலம் குறிப்பிடத்தகுந்த அளவில் எவ்விதமான வசதிகளும் இல்லாத மாநிலமாக உள்ளது. குறிப்பாக, பெரிய அளவிலான தனியார் மருத்துவமனைகள் ஆந்திராவில் தற்போது இல்லை.

ஆந்திராவில் உள்ள கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக ஹைதராபாத் செல்ல தெலுங்கானா போலீசார் கட்டுப்பாடு | Tamilnadu

எனவே, ஆந்திராவிலுள்ள கொரோனா நோயாளிகள் தங்களுடைய உடல்நிலை மிகவும் மோசம் அடையும் நிலையில் தீவிர சிகிச்சைக்காக அண்டை மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதனால், உடல்நிலை மோசமடையும் பெரும்பாலான கொரோனா நோயாளிகள் ஆந்திராவிலிருந்து ஹைதராபாத்துக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் செல்கின்றனர்.

நேற்று முன்தினம் வரை கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக ஆந்திராவிலிருந்து ஹைதராபாத் செல்வதில் எவ்விதமான இடையூறும் இல்லாமல் இருந்தது.

ஆனால், நேற்று முதல் இரண்டு மாநில எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி தெலுங்கானா போலீசார் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ்களில் ஹைதராபாத் புறப்பட்டு செல்லும் கொரோனா நோயாளிகளை எல்லையில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைத்தனர். வைத்தியத்திற்காக, இந்தியாவில் வசிக்கும் நபர்கள் நாட்டிலுள்ள எந்த பாகத்திற்கும் செல்லலாம். அது அவர்களுடைய அடிப்படை உரிமைகளில் ஒன்று. எனவே, தெலுங்கானா போலீசாரின் இந்தச் செயலுக்கு கடும் கண்டனங்கள் வெளிப்பட்டன.

இந்த நிலையில், இன்று காலை முதல் ஆந்திராவிலிருந்து தீவிர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ்களில் தெலுங்கானா செல்லும் கொரோனா நோயாளிகளிடம், ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கைகளை முன்பதிவு செய்ததற்கான ஆதாரங்களை காண்பித்தால் மட்டுமே, அவர்கள் ஹைதராபாத் செல்ல தெலுங்கானா மாநில போலீசார் அனுமதிக்கின்றனர்.