11 நோயாளிகள் பலி : சமூக ஊடகங்களில் ரிசைன் ஜெகன் எனும் ஹாஷ்டேக் இந்தியளவில் டிரெண்டிங்
5 நிமிடத்திற்கு வென்டிலேட்டர்களுக்கான ஆக்சிஜன் சப்ளை தடை ஏற்பட்டதால் திருப்பதி அரசு மருத்துவமனையில் 11 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து முதல்வர் ஜெகன் மோகனை பதவி விலக கோரி எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
நாடு முழுவதும் கொரோனா 2-ம் அலை அதிகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக பலர் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பதியில் உள்ள ரூயா அரசு மருத்துவமனையில் நேற்று மாலை ஆக்சிஜன் இருப்பு குறைந்துள்ளது. இதைக் கவனிக்காமல் விட்டுள்ளனர். தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து ஆக்சிஜன் டேங்கர் வருவதற்கு தாமதமானால், 5 முதல் 10 நிமிடங்கள் வென்டிலேட்டர்களுக்கான ஆக்சிஜன் சப்ளை தடைப்பட்டுள்ளது.
அலட்சிய போக்கினால் 11 கொரோனா நோயாளிகள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரத்தால் ஜெகன் மோகன் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் ரிசைன் ஜெகன் எனும் ஹாஷ்டேக் இந்தியளவில் டிரெண்டாகி இருக்கிறது. ஜெகன் மோகன் அரசு படுகொலை செய்துவிட்டதாகவும், அவரது நிர்வாகத்தில் மனித உயிர்களுக்கு மதிப்பில்லை என்றும் எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் விமர்சித்து வருகின்றனர்.