புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்!

tamilnadu
By Nandhini May 11, 2021 06:12 AM GMT
Report

இன்று சட்டப்பேரவையில் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். இவர்கள் அனைவருக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் புதிய எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்தக் கூட்டத்திற்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் சிவசங்கர், மதிவேந்தன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

தமிழக சட்டப்பேரவையில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று கூறி எம்எல்ஏவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.வாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “இன்று சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவி ஏற்றுக் கொள்ளும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரவர் தொகுதி மக்களை கொரோனாவிலிருந்து காப்பதை முழுமுதற் கடமையாகக் கருதி செயலாற்றும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.