சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்தவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது!
மயிலாடுதுறை அருகே சிறுமியைக் கடத்திச் சென்று திருமணம் செய்தவர் மீது போலீசார் போக்சோ மற்றும் குழந்தைகள் திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் பாலமுருகன் டிரைவர் பணி செய்து வருகிறார். மயிலாடுதுறை நர்சிங் கல்லூரியில் பயின்ற 17 வயது சிறுமியை கடந்த சில மாதங்களாக பின் தொடர்ந்து வந்துள்ளார்.
இதனையடுத்து, கடந்த 8ம் தேதி சிறுமி வீடு திரும்பவில்லை. பெற்றோர்கள் எங்கு தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதனையடுத்து, அவரது பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது மகளை பாலமுருகன் கடத்திச் சென்றதாக புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் உறவினர் வீட்டில் தங்கியிருந்த பாலமுருகனை கைது செய்தனர்.
சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சிறுமியிடம் ஆசை வார்த்தைக் கூறி காதல் வயப்படுத்தி, திருமணம் செய்து பலாத்காரம் செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
உடனடியாக போலீசார் போக்சோ மற்றும் குழந்தைகள் திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பாலமுருகனை சிறையில் அடைத்துள்ளனர்.